நிதி நிறுவன வழக்கில் நீதிபதி குழு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் மோசடியாக விற்பனை: சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: பிஏசிஎல் நிதி நிறுவன மோசடியில் நீதிபதி லோதா குழு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த டி.வளன்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "இந்தியா முழுவதும் பிஏசிஎல் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.49 கோடிக்கும் அதிக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது. முதலீட்டாளர்கள் பணத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பினாமி நிறுவனங்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் பிஏசிஎல் மோசடியை சிபிஐ விசாரிக்கவும், நிறுவன சொத்துகளை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் 12.3.2013-ல் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் பிஏசிஎல் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பெயரிலுள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலம் நீதிபதி லோதா குழுவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த சொத்துகளை நீதிபதி லோதா குழுவிடம் தடையில்லா சான்று பெறாமல் பத்திரப் பதிவு செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு 2018-ல் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நீதிபதி லோதா குழுவின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் கிருஷ்ணபிள்ளை, அவர் மகன் ஐயப்பன் ஆகியோர் பிஏசிஎல் நிறுவன சொத்துக்களை போலி ஆவணங்களின் மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு 9.2.2021-ல் மனு அனுப்பினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிபதி லோதா குழுவின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பிஏசிஎல் சொத்துக்கள் விற்கப்பட்டது குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார்.

அப்போது, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "பிஏசிஎல் நிறுவனம் இந்தியா முழுவதும் 40 ஆயிரம் சொத்துக்களை பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு சொத்துக்களின் மீது ஏற்படும் பிரச்சினைகளை சிபிஐ விசாரிக்க வாய்ப்பில்லை. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். நீதிபதி குழுவின் தடையில்லா சான்றிதழ் பொறாமல் பிஏசிஎல் சொத்துக்கள் சார் பதிவாளர் பத்திர பதிவு செய்தது தொடர்பாக தமிழக அரசு விசாரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: "பிஏசிஎல் நிறுவனத்தின் ரூ.49 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் மனுதாரரின் புகார் தொடர்பாக சிபிஐ-யால் மட்டுமே விசாரிக்க முடியும். இதனால் மனுதாரரின் புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். விசாரணையை 8 வாரத்தில் முடிக்க வேண்டும்." இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE