உதகை அருகே பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு: ஆய்வுக்கு அனுப்பி போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

உதகை: உதகையை அடுத்த உல்லத்தி பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தின் புதர் பகுதியில் எலும்புக் கூடும், அதன் அருகே துணிகள் கிழிந்த நிலையிலும், மது பாட்டில்களும் இருந்துள்ளன. இதை பார்த்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி தலைமையிலான போலீஸார் சென்று, எலும்புக் கூட்டை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த எலும்புக் கூடு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அமைப்புடன் ஒத்து போகிறது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறும் போது, ‘‘மீட்கப்பட்ட எலும்புக் கூடு, ஓராண்டுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம். புதர் பகுதி என்பதால், வெளியூர் ஆட்கள் வர வாய்ப்பில்லை. எனவே, உள்ளூரில் மாயமானவர்கள் யாராவது உள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் மாயமாகவில்லை என்று தெரிகிறது. எலும்புக் கூடு கிடந்த இடத்தின் அருகே சுடுகாடு இருப்பதால், சரியாக புதைக்காத சடலத்தை நரி அல்லது கரடி இழுத்து வந்து இங்கு போட்டிருக்கலாம். எலும்புக் கூடு மட்டும் இருப்பதால், ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் தான் என்ன நடந்தது என்பது உறுதியாக தெரியும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE