டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் ரூ.69 லட்சம் மோசடி செய்த குஜராத் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணிடம் ரூ.69.40 லட்சம் மோசடி செய்ததாக வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ‘டேட்டிங்’ செயலி மூலம் வடமாநில இளைஞர் ஒருவர் அறிமுகமானார். தினமும், ஒருவருக்கொருவர் அந்த செயலி மூலமாக தொடர்பு கொண்டு மணிக் கணக்கில் பேசி, தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர். பின்னர், சில நாட்கள் கழித்து, இருவரும் டெலி கிராம் செயலி மூலமாக பேச தொடங்கினர்.

அப்போது இருவரும் தங்களது சுய விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த பெண், அந்த நபரை பார்க்க வேண்டும் என்று பல முறை ‘வீடியோ காலில்’ அழைத்துள்ளார். ஆனால், அந்த நபர் வீடியோ அழைப்பை எடுக்காமல் பல்வேறு காரணம் கூறி அதனை தவிர்த்து, ஆடியோ, குறுஞ் செய்தி மூலமாகவே பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நிய செலவாணி வர்த்தகத்தில்தான் ஈடுபடுவதாகவும், அதில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என்றும் அந்த நபர், பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியதாகவும், இதை நம்பி, அந்த பெண், ரூ.69.40 லட்சம் பணத்தை அதில் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், சில நாட்கள், தொடர்ச்சியாக அந்த பெண், டெலி கிராம் செயலி மூலம் அந்த நபரை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான், அந்த இளைஞர், தன்னிடம் கூறிய விவரங்கள் அனைத்தும் போலியானது என்றும், தான் ஏமாற்றப்பட்டதையும் அந்த பெண் உணர்ந்தார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் அவர் புகார் அளித்தார்.

சைபர் போலீஸ் விசாரணை: சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டதாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சுதிர் தண்டன்(39) என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE