ரத்த கறையுடன் நின்ற காரில் வந்த ஆசிரியை உட்பட இருவர் எங்கே? - போலீஸார் விசாரணை @ கோவை

By செய்திப்பிரிவு

கோவை: கோவை உக்கடம் ராமர் கோயில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பின்புறம், கடந்த 3 நாட்களாக ஒரு கார் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு பெரியகடை வீதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரில் சோதனை நடத்தினர். அப்போது காரின் பல இடங்களில் ரத்த கறை படிந்திருந்தது தெரிந்தது. ஒரு சுத்தியல், போர்வை, துண்டு ஆகியவையும் இருந்தன. விசாரணையில் அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது.

அவரது மனைவி தீபா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 17-ம் தேதி பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு காரில் புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும், தீபா மாயமானது குறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருவதும் தெரியவந்தது. தீபா மற்றும் அவருடன் வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆண் நண்பர் என்ன ஆனார்கள், காரை நிறுத்திவிட்டு எங்கே சென்றனர்? ரத்தக்கறை வந்தது எப்படி என்பது குறித்து கடைவீதி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE