கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பு மையம் நடத்திய போலி மருத்துவர் கைது

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே இந்திலிமுயல் குன்றில், கருக்கலைப்பு மையம் நடத்திய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் இயந்திரம் உட்பட ரூ. 2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள இந்திலி மேற்கு காட்டுக் கொட்டாய் முயல்குன்று பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (43). இவர் பார்மஸி டிப்ளமோ படித்துள்ளார். இவர் கர்ப்பிணிகளுக்கு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வருவதாக பாலின தேர்வை தடை செய்தல் சட்ட மாநில அளவிலான கண் காணிப்பு குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இக்கண்காணிப்பு குழுடிஎஸ்பி சரவண குமார் தலைமை யில், கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராமு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் நிர்வாக அலுவலர் கமலக் கண்ணன், சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முருகேசன் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதில், அங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு கர்ப் பிணிகளுக்கு, ஆணா, பெண்ணா என பரிசோதனை நடத்தியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர்களுக்கு கருக் கலைப்பு செய்ய இருந்ததும் தெரிய வந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அந்த கர்ப்பிணிகள் அங்கிருந்து சென்று விட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

கருக்கலைப்பு மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அங்கிருந்து கர்ப்பிணிகளுக்கு ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் ஸ்கேனிங் மெஷின், கருக் கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள், கையுறை, ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அனுமதியில்லாமல் இயங்கி வந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கருக்கலைப்பு மையத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

முருகேசன் பயன்படுத்தி வந்தமருத்துவ உபகரணங்கள், 2 கார்கள்,ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். முருகேசன் மீது சின்ன சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கெனவே இதுபோல 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE