தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து @ தருமபுரி - அசம்பாவிதம் தவிர்ப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்னி பேருந்துகள் பொள்ளாச்சி-பெங்களூரு இடையே தினமும் இயக்கப்படுகின்றன. இந்நிறுவன பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சியில் இருந்து பெங்களூருவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றது. பேருந்தை தென்காசி மாவட்டம் வி.கே.புதூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது (24) ஓட்டிச் சென்றார். மாற்று ஓட்டுநராக தென்காசியைச் சேர்ந்த அக்பர் அலி (26) உடன் சென்றார்.

பெங்களூருவில் பயணி களை இறக்கி விட்ட பின்னர் இந்தப் பேருந்து நேற்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை. நேற்று மாலை 3 மணியளவில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கெங்கலாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு பரிசோதித்தார். அப்போது பேருந்துக்குள் தீப்பற்றியது.

இதைக் கண்ட ஓட்டுநர் மற்றும் மாற்று ஓட்டுநர் ஆகியோர் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அருகில் இருந்தவர்கள் தீ விபத்து பற்றி தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ பேருந்து முழுவதும் வேகமாக பரவி எரிந்ததால் தீயணைப்புத் துறையினர் செல்லும் முன்பாகவே பேருந்தின் பெரும்பகுதி எரிந்து சேதமானது.

பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாதது நல்வாய்ப்பாக அமைந்தது. இந்த விபத்து மேம்பாலத்தில் நடந்ததால், பாலத்தின் இருபுறமும் அமைக்கப் பட்டுள்ள சர்வீஸ் சாலைகள் வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தின் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து தொப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE