சென்னை | போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் மரணம்: உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, அந்த மறுவாழ்வு இல்லஉரிமையாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் வசித்தவர் விஜய் (28). ஆட்டோ ஓட்டுநரான இவர் மது போதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. அவரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, அவரது குடும்பத்தினர் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி வளசரவாக்கம், ஓம்சக்தி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒருபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த விஜய்க்கு கடந்த 25-ம் தேதி மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் விஜய்யை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் விஜய்ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து, விஜய்யின் சகோதரர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சம்பவத்தன்று விஜய்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போதுபோதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் விஜய்யைஏன் நடிக்கிறாய் எனலேசாக அடித்ததாகக் கூறப்படுகிறது. இது விஜய்யின் இறப்புக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போதை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் அழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் இறப்பு விவகாரம் தொடர்பாக போதை மறுவாழ்வு மைய கவனிப்பாளர் விருதுநகரைச் சேர்ந்த குரூஷ்என்ற குரு (34), அந்த மையத்தின் உரிமையாளர் மதுரவாயல் வினோத்குமார் (41) மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த அஜய் (19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சிசிடிவி கேமரா பதிவுகளின் ஹார்டுடிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE