கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி 2 இளைஞர்களை மருள் ஊமத்தை மருந்து கொடுத்து கொன்றுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பத்மினி(65) என்பவர் தனது பேரன் அசோக்ராஜை(27) நவ.13-ம் தேதி முதல் காணவில்லை என நவ.15-ம் தேதி புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அசோக்ராஜின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், அசோக்ராஜ் எழுதியதாக, பத்மினிக்கு நவ.16-ம் தேதி வந்த கடிதம் குறித்தும் போலீஸார் விசாரித்தனர்.
இதையடுத்து, நவ.19-ம் தேதி சோழபுரத்தைச் சேர்ந்த சித்த வைத்தியரான தங்கையன் மகன் கேசவமூர்த்தி(47) என்பவரை கைது செய்து விசாரித்ததில், காணாமல்போன அசோக்ராஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கேசவமூர்த்தி மீது கொலை செய்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.
» தென் மாவட்ட அமமுக கூடாரத்தை அசைத்துப் பார்க்கும் அதிமுக - என்ன செய்யப்போகிறார் டிடிவி.தினகரன்?
இந்த விசாரணையில், கேசவமூர்த்தி தன்பாலின உறவு பழக்கம் உடையவர் என்பதும். இவருக்கு ஏற்கெனவே 2 முறை திருமணமாகி குழந்தையின்மையால் 2 மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், சென்னையில் கட்டிடப்பணி செய்து வந்த இவர், நாட்டுவைத்தியர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி, அவரிடம், சில விவரங்களை தெரிந்துகொண்டு, சோழபுரத்தில் நாட்டுவைத்தியம் செய்து வந்துள்ளார்.
குறிப்பாக, இளைஞர்களுக்கு போதையை தூண்டும் மருள்ஊமத்தை செடியால் தயாரித்த மூலிகைப் பொடியை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கேசவமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த அசோக்ராஜ், தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் கூறியதால், ஆத்திரமடைந்த கேசவமூர்த்தி, அசோக்ராஜை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அசோக்ராஜ் நவ.13-ம் தேதி இரவு வழக்கம்போல கேசவமூர்த்தி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு போதை மூலிகை மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் அவர் மயங்கினார்.
பின்னர், அசோக்ராஜை கொலை செய்து உடல்பாகங்களை தனித்தனியே வெட்டி வீட்டின் பின்புறம் கழிப்பறை மற்றும் வீட்டில் மூலிகைச் செடி வளர்க்கும் இடங்களில் புதைத்துள்ளதாக, அவர் கூறியதன்பேரில், நவ.19-ம் தேதி வருவாய்த் துறையினர் முன்னிலையில் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் அசோக்ராஜின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு, அசோக்ராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று, 2021-ம் ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன தமிமுன் அன்சாரியின் மகனான முகமது அனாஸும், கேசவமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். முகமது அனாஸும் திருமணம் செய்ய முயற்சித்த போது, அவருக்கும் மருள் ஊமத்தை மூலிகைப் பொடியை கொடுத்து, கொலை செய்து, தனது வீட்டின் பின்புறம் புதைத்ததாகவும் சிறிது நாட்களுக்கு பிறகு புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை சுடுகாடு பகுதியில் வீசி விட்டதாகவும், அதன் தாடை எலும்பு, வெள்ளி செயின் இரண்டை மட்டும் எடுத்து வீட்டினுள் மறைத்து வைத்துள்ளதாகவும் கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவை கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து, கேசவமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை தோண்டி ஆய்வு செய்ததில், வேறு தடயம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கேசவமூர்த்தியிடம் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேசவமூர்த்தியின் வீட்டிலிருந்து ஆடு வெட்டும் 3 கத்திகள், ஒரு கட்டர், அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் அதிநவீன 20 பிளேடுகள், கத்திரிக்கோல், கையுறை, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago