சென்னை | 186 கிலோ கஞ்சா கடத்திய 2 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

By செய்திப்பிரிவு

சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் கைதான2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு செப்.27-ம்தேதி சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலை பகுதியில் நின்றிருந்த காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சாக்குப் பைகள் இருப்பதாக மதுரவாயல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் நின்றிருந்த அந்த காரை சோதனை செய்ததில், கார் உள்ளே இருந்த சாக்குபைகளில் 186 கிலோ எடைகொண்ட கஞ்சா மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சா கடத்தி வந்ததாக மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த புதுராஜா (25), பெரிய கருப்பன் (39) ஆகியோர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் பழக்கத்தால், குடும்பத்தில் கல்வி, பணிசார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நோய் தாக்கம் மற்றும் இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, இரண்டு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE