வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த 10 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த விவகாரத்தில் சாட்சிகள்யாரும் இல்லாததால், அறிவியல்பூர்வமான முறையில் சோதனையும், அதன் அடிப்படையிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வேங்கைவயல், முத்துக்காடு, இறையூர், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 31 பேர் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இவர்களில் 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், “வேங்கைவயல் வழக்குவிசாரணை நடைபெற்று வரக்கூடிய புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வரும் 28-ம் தேதி ஆஜராகி, உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பது குறித்த தங்களின் கருத்தை தெரிவிக்கலாம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபணை இல்லை எனகருத்து தெரிவிப்போர், அதற்குரிய ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE