இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டில் எலும்பு துண்டுகள்

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்தவைத்தியர் வீட்டில் மாவட்ட எஸ்.பி. நேற்று ஆய்வு மேற்கொண்டார். வீட்டைச் சுற்றி பள்ளம் தோண்டியதில், 8 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம்மணல்மேட்டைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் அசோக்ராஜன்(27). சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னை திரும்பியபோது காணாமல் போனார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அசோக்ராஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தியிடம்(47) போலீஸார் விசாரித்தனர்.

அப்போது, அசோக்ராஜனை கேசவமூர்த்தி கொலைசெய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி,வீட்டின் பின்புறம் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கேசவமூர்த்தியை போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நவ.19-ம் தேதிமுதல் 21-ம் தேதி வரை கேசவமூர்த்தி வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டு, வீட்டுக்குள் இருந்து சில எலும்புகள் மற்றும் வெள்ளிச் சங்கிலி ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து, கேசவமூர்த்தி வீட்டில் தஞ்சாவூர் எஸ்.பி. ஆசிஷ் ராவத் மற்றும் வருவாய்த் துறை, தடய அறிவியல் துறையினர், 20-க்கும் மேற்பட்ட போலீஸார்நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கேசவமூர்த்தியின் வீட்டைச் சுற்றிலும் பொக்லைன் உதவியுடன் பள்ளம் தோண்டி, சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டின் முன்புறம் தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE