தி.மலை | படைவீடு ஊராட்சியில் மதுக்கூடமாக மாறிய கால்நடை மருத்துவமனை வளாகம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: சந்தவாசல் அடுத்த படைவீடு ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தை மது அருந்தும் கூடமாக மாற்றிய சமூக விரோத கும்பல் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், விவசாயி களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவ சாயத்துக்கு அடுத்த படியாக ‘கால்நடை வளர்ப்பு’ பிரதானமாக உள்ளது. மழைக் காலங்களில் கோமாரி உள்ளிட்ட நோய்கள் தாக்குகின்றன. இதனால், கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கால்நடைகளை விவசாயிகள் அழைத்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளை போன்று கால்நடை மருத்துவமனையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சந்தவாசல் அடுத்த அ.கோ.படைவீடு ஊராட்சி, வீரக்கோயில் பகுதியின் நட்சத்திரக்குன்று அடிவாரத்தில் கால்நடை மருத்துவமனை உள்ளது. படைவீடு ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோயில், வேட்டகிரிபாளைம், மல்லிகாபுரம், ராமநாதபுரம், சாமந்திபுரம், துரிஞ்சாபுரம், பெருமாள்பேட்டை, தேவனாங்குப்பம், காளிகாபுரம், கேசவபுரம் உட்பட 32 குக்கிராமங்களில் வளர்க்கப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இங்குதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கால்நடை மருத்துவமனையை, தங்களின் கட்டுப்பாட்டுக்கு சமூக விரோத கும்பல் கொண்டு வந்துவிட்டது.

அவர்களின் அடாவடி செயல் இரவு நேரங்களில் அதிகளவில் நடைபெறுகிறது. கால்நடை மருத்துவமனை வளாகத்தை ‘மது கூடமாக’ மாற்றிவிட்டனர். டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில் மற்றும் மலையடிவாரத்தில் விற்கும் பாக்கெட் சாராயம் ஆகியவற்றை வாங்கி வந்து சமூக விரோதிகள் அருந்துகின்றனர். மலையடிவாரம் என்பதால் தடையின்றி சாராயமும் கிடைக்கிறது. மது அருந்திவிட்டு, போதையில் பாட்டில்களை தூக்கி வீசியும், சுவறு மற்றும் இரும்பு கதவில் அடித்து உடைக்கின்றனர். மேலும், மதுபாட்டில், சாராய பாக்கெட் உட்பட அனைத்து பொருட்களையும், அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர்.

கால்நடை மருத்துவமனையை திறந்து பணியாற்ற வரும் மருத்துவர், ஆய்வாளர் உள்ளிட்டோர் செய்வதறியாமல் உள்ளனர். சந்தவாசல் காவல்நிலையத்தில் முறையிட்டும் பலனில்லை. அவர்களது ‘ஆசி’ உள்ளதால், மதுப்பிரியர் களின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அவர்கள் விட்டுசென்ற கழிவுகளை சுத்தம் செய்வது என்பது அன்றாட பணியாகிவிட்டது. இதற்கு தீர்வு காண, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். படைவீடு ஊராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனையின் முன்பு மதுப்பிரியர்கள் விட்டுச்சென்ற மதுபாட்டில் உள்ளிட்ட பொருட்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE