53 வழக்குகள் நிலுவை: திருச்சி ரவுடி என்கவுன்ட்டர் முழு பின்னணி!

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜெகன், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பனையக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெகன்(எ)கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த 5 கொலைகள், வழிப்பறி, அடிதடி என 53 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சில கொலை வழக்குகளில் கூலிப்படையாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர், கடந்த மே 19-ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி, கூட்டாளிகளுடன் சேர்ந்து பட்டாக் கத்தியைக் கொண்டு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெகனின் கூட்டாளிகள் 9 பேரைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஜெகனை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள சனமங்கலம் என்ற பகுதியில் ஜெகன் பதுங்கி இருப்பதாக, ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில், தனிப்படை போலீஸார் அங்கு சென்று ஜெகனைப் பிடிக்க முயன்றனர்.

அப்போது, அவர் 2 பெட்ரோல் குண்டுகள், ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை போலீஸார் மீது வீசியுள்ளார். இதில் போலீஸார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், தான் கையில் வைத்திருந்த அரிவாளால், உதவி ஆய்வாளர் வினோத்குமாரின் இடது கையில் வெட்டிவிட்டு ஜெகன் தப்பியோட முயன்றார்.

இதையடுத்து, ஆய்வாளர் கருணாகரன், தனது துப்பாக்கியால் ஜெகனின் கால் பகுதியை நோக்கி 2 முறை சுட்டார். ஆனால், அவரது வயிறு, நெஞ்சு பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் வினோத்குமார் திருச்சி அரசு மருத்துவமனையிலும், ரவுடிஜெகன் லால்குடி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். ரவுடி ஜெகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வினோத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி பகலவன், எஸ்.பி. வருண்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ரவுடி ஜெகன் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், ஜெகன் உடல் பிரேதப்பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காயமடைந்த உதவி ஆய்வாளர் வினோத்குமாரை காவல் உயரதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE