திருச்சி அருகே என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற கொம்பன் ஜெகனை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்ற கொம்பன் ஜெகன். இவர் மீது திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 19ம் தேதி, ஜெகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், பல்வேறு ரவுடிகள் ஆயுதங்களுடன் கலந்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்தனர். அப்போது அங்கிருந்து ஜெகன் தப்பிச் சென்றுள்ளார்.

தலைமறைவாக இருந்த ஜெகனை, போலீஸார் தேடிவந்த நிலையில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலத்தில் ஜெகன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு சென்ற போலீஸார் ஜெகனை பிடிக்க முயன்றுள்ளனர். போலீஸாரைத் தாக்கிவிட்டு, ஜெகன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது ஜெகனின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் போலீஸார் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், போலீஸார் மீது ரவுட ஜெகன் நடத்திய தாக்குதலில், படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத், லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE