மதுரை ஆட்சியர் வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான இலவச வேட்டிகளைத் திருடிய வழக்கில் நில அளவையர் கைது

By என்.சன்னாசி

மதுரை: மதுரை ஆட்சியர் வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள இலவச வேட்டிகளைத் திருடிய வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நில அளவையர் கைது செய்யப்பட்டார்.

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சொந்தமான கருவூலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு வழங்க இலவச வேட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 7-ஆம் தேதி கருவூலத்தை திறந்து பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 12,500 இலவச வேட்டிகள் திருடுபோனது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்தபோது, ஏற்கெனவே நடந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள வேட்டிகளை நில அளவையர் சரவணன் என்பவர் 4 பேரிடம் விற்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வேட்டிகளை வாங்கிய 4 பேரை கைது செய்தனர். வேட்டிகளும் மீட்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய நபரான நில அளவையர் சரவணனை தனிப்படை போலீஸார் தேடினர். இருப்பினும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், தஞ்சாவூரில் பதுங்கியிருந்த சரவணனை (48) தனிப்படையினர் கைது செய்தனர். சரவணனின் 3 வங்கிக் கணக்கினை முடக்கியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE