அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு அரிவாள் வெட்டு: பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர்மற்றும் நடத்துநரை அரிவாளால்வெட்டியவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி, பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் நேற்று பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசத்திலிருந்து திருநெல்வேலியை நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ரெஜின்(43) ஓட்டினார். அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) நடத்துநராக செயல்பட்டார்.

இந்தப் பேருந்து வீரவநல்லூருக்கு முந்தைய ஊரான கல்லிடைக்குறிச்சிக்கு வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை நடுவழியில் மறித்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரை ஓட்டுநர் ரெஜின்கண்டித்ததால், இருவருக்கும்இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பேருந்து வீரவநல்லூருக்கு வந்ததும், அங்கு காத்திருந்த கும்பல் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டது. காயமடைந்த இருவரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வீரவநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 3 பேரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து, பாபநாசம் பணிமனையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நேற்று அதிகாலை முதலே அவர்கள் பேருந்துகளை இயக்க மறுத்தனர். தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர்முகம்மது சபீர் ஆலம் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, "குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை, ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், காலை 8.30 மணி முதல் பணிமனையிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, ஓட்டுநர், நடத்துநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து,திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனிசாமி அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீதான தாக்குதலை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப்பேருந்து ஊழியர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பற்ற திமுகஆட்சியில், தொடர்ந்து பணியாற்றுவது எப்படி என்று அரசுப் பணியாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் கொலை, கொள்ளை, அராஜகம், அடாவடி, கஞ்சா விற்பனை என சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பகலிலேயே நடமாட அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ரவுடிகள், குண்டர்களுக்கு காவல் துறை மீது பயம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம்.

அதிமுக ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல் துறை, திமுக ஆட்சியில் ஆள்வோருக்கு வேண்டாதவர்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்வதில் மட்டுமே தீவிரம் காட்டி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிப்போரை தமிழக காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், போலீஸாரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE