வட தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர்: தமிழகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் விலை கொடுத்து வாங்கி ஆந்திர மாநிலத்துக்கு கடத்து கின்றனர்.

இதை பெரியளவில் தொழிலாக செய்து வருபவர்கள் லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் சென்று அங்குள்ள அரிசி ஆலைகளில் ‘பாலீஸ்’ செய்து மீண்டும் தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்று வருவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக புகார் கூறப்படுகிறது. கோடிகளில் புரளும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வருக்கு அவசர கடிதம் ஒன்றையும் எழுதி சலசலப்பை ஏற்படு்த்தினார்.

இதையடுத்து, தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கிறது. கடத்தல் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் நபர்களை கைது செய்ய முடியாமல் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த செப்.23-ம் தேதி பள்ளி கொண்டா அருகேயுள்ள ரகசிய கிடங்கில் இருந்து லாரியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நாகராஜ் மற்றும் சிவக்குமார் ஆகியோரை பள்ளி கொண்டா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் காவலர்கள் பிடித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் வசம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது வட தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக இருந்து வரும் குடியாத்தம் கணேசன் (67) என்பவர் குறித்த தகவல் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் லாரியுடன் 14 டன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கிலும் குடியாத்தம் கணேசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கணேசனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என தீவிரமாக நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் கணேசனை கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘குடியாத்தம் கணேசன் ரேஷன் அரிசி கடத்தலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம் என பல மாவட்டங்களில் ஆட்களை நியமித்து லோடு, லோடாக ரேஷன் அரிசி கடத்தி வருகிறார்.

இவர், மீது பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், ரேஷன் அரிசி கடத்தலை அவர் நிறுத்தவில்லை. ஏற்கெனவே குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறைக்கு சென்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைதாகியுள்ளார்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE