உ.பி.யில் ஹோட்டல் பெண் ஊழியரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவருக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து சனிக்கிழமை இரவு வந்த அழைப்பினைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறுகையில், "சனிக்கிழமை இரவு சொகுசு ஹேட்டல் (ஹோம்ஸ் டே) ஒன்றில் பெண் ஊழியர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்படிருப்பதாக தாஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

பாதிக்கப்பட்ட பெண், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். அவரை கும்பல் ஒன்று அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் தொடர்புடைய இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE