மதுரையில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த தனிப்படை போலீஸார்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனைப் பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து, கொள்ளையனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்தவர் லதா. இவர் கடந்த 4-ம் தேதி இரவு கூடல்புதூர் வைகை நதி தெருவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை மோட்டார் சைக்கிளில் ஒருவர் பின் தொடர்ந்தார். திடீரென அந்த நபர், லதா சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது, மோட்டார் சைக்கிளால் மோதினார்.

இதில் நிலைதடுமாறி லதா கீழே விழுந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அந்த நபர் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பினார். கீழே விழுந்ததில் லதா காயமடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. வழிப்பறி குறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரித்தனர்.

மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நகை பறிப்பில் ஈடுபட்டது மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, செல்லூர் களத்துபொட்டல் பகுதியில் பதுங்கியிருந்த ஸ்டீபன் ராஜை, செல்லூர் காவல் ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் போலீஸார் நேற்று பிடிக்க முயன்றனர். ஆனால், ஸ்டீபன் ராஜ், தான் வைத்திருந்த அரிவாளால் உதவி ஆய்வாளர் ரஞ்சித்தின் கை, முதுகுப் பகுதியில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்றார்.

அப்போது, அருகில் இருந்த காவல் ஆய்வாளர் ஆறுமுகம், துப்பாக்கியால் 2 முறை ஸ்டீபன் ராஜ் மீது சுட்டத்தில், அவரது முழங்கால் பகுதியில் காயமடைந்து, கீழே விழுந்தார். பின்னர், கொள்ளையன் ஸ்டீபன் ராஜை பிடித்த போலீஸார், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், அவர் வெட்டியதில் காயமடைந்த எஸ்.ஐ. ரஞ்சித்தும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டீபன் ராஜா மீது ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.ஐ. ரஞ்சித்தை, காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் சிநேகப்பிரியா ஆகியோர் நேற்று இரவு சந்தித்து, நலம் விசாரித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE