விருகம்பாக்கத்தில் போலி போலீஸ் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வடபழனியைத் தொடர்ந்து விருகம்பாக்கத்திலும் போலி போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, விருகம்பாக்கம், ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன் (25). இவர் நேற்று அதிகாலை விருகம்பாக்கம், ரெட்டிதெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு போலீஸ் சீருடை அணிந்து வந்த நபர் ஒருவர், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டார்.

உங்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே, காவல் நிலையம் அழைத்துச் செல்ல உள்ளேன். பணம்கொடுத்துவிட்டால் விட்டு விடுகிறேன் என ஒதுக்குப்புறமாக அழைத்து பேரம் பேசியுள்ளார்.இதையடுத்து தன்னிடம் இருந்தபணத்தை கொடுத்து விட்டு லோகேஷ்வரன் அங்கிருந்து சென்றுள்ளார். போலீஸ் என கூறி பணவசூலில் ஈடுபட்ட நபரும் இருசக்கரவாகனத்தில் அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்று விட்டார்.

சந்தேகம் அடைந்த லோகேஷ்வரன் தன்னிடம் பணம் பறிக்கப்பட்டது குறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதன் அடிப்படையில் பணப் பறிப்பில் ஈடுபட்டது அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, பாண்டியன் தெருவைச் சேர்ந்த நாகமணி (29) என்பதும், அவர் உண்மையான போலீஸ் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார்கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நாகமணி தனியார் நிதி (பைனான்ஸ்) நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் வடபழனியில் போலி போலீஸ் எஸ்ஐ கைது செய்யப்பட்ட நிலையில், நேற்றுவிருகம்பாக்கத்தில் போலி போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE