கோவை தனியார் கல்லூரி ராகிங்: இதுவரை 7 பேர் கைது; மேலும் ஒரு மாணவரை பிடிக்க தனிப்படை தீவிரம்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவர் ராகிங் செய்யப்பட்ட விவகாரத்தில், இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர், இக்கல்லூரியில் பி.இ, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வந்தார். இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன்னர், இம்மாணவர் விடுதி அறையில் இருந்த போது, சீனியர் மாணவர்கள் 7 பேர் உள்ளே நுழைந்து இம்மாணவரை தங்களது அறைக்கு தூங்கிச் சென்று மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் சீனியர் மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து, 18 வயது மாணவரை தாக்கி, மொட்டையடித்து, ஆடைகளை களைந்து ராகிங் கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் தன் பெற்றோர் உதவியுடன் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரித்து ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இவ்வழக்கில் மேலும் ஒரு மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர் தற்போது தலைமறைவாக உள்ளார். தனிப்படை போலீஸார் அம்மாணவரை பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக,தொடர்புடைய கல்லூரியில் காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு விசாரித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாநகரில் உள்ள கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களை இதுபோன்று ராகிங் செய்வது கண்டறியப்பட்டால், தொடர்புடைய மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ராகிங் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்கும் பொழுது கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE