தனியார் கல்லூரி மாணவரை ராகிங் செய்ததாக 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் தங்கி, பி.இ. முதலாமாண்டு படித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் விடுதி அறையில் இருந்த இவரை, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேர் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று, பணம் கேட்டு மிரட்டினார்களாம்.

ஆனால், அந்த மாணவர் பணம் தர மறுக்கவே அவரை சரமாரியாகத் தாக்கி, மொட்டையடித்தனர். மேலும்,அவரது ஆடைகளையும் களைந்து நிர்வாணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை அவரை மிரட்டி அனுப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவர், தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பீளமேடு போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸாரின் விசாரணையில், முதலாமாண்டு மாணவரை, சீனியர் மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாகப் பேசுதல்,கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், ராகிங் தடுப்பு சட்டப் பிரிவு ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE