அம்பத்தூர் தொழிற்பேட்டையில் போலீஸாரை தாக்கியதாக 28 பிஹார் மாநில தொழிலாளர்கள் கைது

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரவாக்கம், வடக்கு பகுதி 11- வது தெருவில், பிளாஸ்டிக் பக்கெட்டுகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.

இங்கு கடந்த அக். 23-ம் தேதி மாலை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அதில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்கள் பங்கேற்றனர். பூஜை முடிந்ததும் அவர்கள் மது போதையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். கல், கட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து விசாரிக்க சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை தலைமை காவலர் ரகுபதி, போலீஸார் ராஜ் குமார், கிரி ஆகியோரை மது போதையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். இதில், காயமடைந்த ரகுபதி, கிரி இருவரும் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ரோந்து வாகனத்தில் அங்கு சென்ற போலீஸாரையும் பிஹார் தொழிலாளர்கள் விரட்டி அடித்தனர்.

இது குறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், கும்பலாக கூடி தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், போலீஸாரை தாக்கிய மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களை பிடிக்க நேற்று முன் தினம் இரவு அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த துகி ராஜ் வன்சி, மனோஜ் ராஜ் வன்சி, கணேஷ் லால் ராஜ் வன்சி, மதன் குமார், முகேஷ் ராஜ் வன்சி, சந்தன், உபேந்திரா விகாஷ் குமார் உள்ளிட்ட 28 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள் இங்குள்ள நிறுவனங்களுடன், கூட்டங்கள் நடத்தி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்த பின்னர் தான் இது போன்ற சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE