ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஆவடி: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவரது செல்போனில் உள்ள ஒரு செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, அந்த செயலியில் உள்ள செயலி முகவரியில் நுழைந்த கார்த்தியை, சிறிய அளவில் முதலீடு செய்தால், அதிக பணம் கிடைக்கும் என்று ஒரு கும்பல் நம்ப வைத்துள்ளது. இதையடுத்து, அவர்கள் அளித்த வங்கிகணக்கில் ஜிபே மூலமாக பல தவணைகளாக ரூ.10 லட்சம் வரைமுதலீடு செய்துள்ளார். பிறகு, சொன்னபடி அதிக பணம் வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்தி, இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை, தி.நகரைச் சேர்ந்த செல்வம் (42) என்பவர் பெயரிலான எஸ் பேங்க் வங்கி கணக்கில் கார்த்தி செலுத்திய பணம் சேர்ந்துள்ளது தெரியவந்தது. செல்வத்திடம் நடத்திய விசாரணையில், மற்றொரு நிலத் தரகரான சென்னை - வளசரவாக்கத்தைச் சேர்ந்த விவேகானந்தன்(44), செல்வத்துக்கு வங்கி கணக்கு தொடங்கிகொடுத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், விவேகானந்தன், கடலூர், லால்பேட்டையைச் சேர்ந்த ஹலிகுல் ஜமால் (42), ஆஷ்கர் ஷெரீப் (38) ஆகியோர், வேலையில்லாதவர்களிடம் மொபைல் செயலி மூலம் பணம் வசூலித்து, வெளிநாடுகளில் இருந்து செயல்படும் இணைய தள மோசடி கும்பலின் வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து, கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE