போலி பில் தயாரித்து ரூ.23.88 லட்சம் மோசடி: தனியார் மருத்துவமனை காசாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: போலியாக பில் தயாரித்து ரூ.23.88 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை முன்னாள் காசாளருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2011-12 காலகட்டத்தில் கொரட்டூரைச் சேர்ந்தஆர்.ஸ்ரீதர் (43), இரவு நேர காசாளராக பணிபுரிந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்து செல்லும் வெளிநோயாளிகளிடம் இருந்து சி.டி. ஸ்கேனுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுத்ததுபோல போலியாக பில் தயாரித்து, ரூ.23.88 லட்சத்தை மோசடி செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அமைந்தகரை போலீஸார் நம்பிக்கை மோசடி, போலியாக பில் தயாரித்தல், கணக்கு ஆவணங்களில் மோசடி செய்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து தரை கைது செய்தனர்.

மேல்முறையீடு: இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் 5-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீதருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,000அபராதம் விதித்து கடந்த ஆண்டுஜன.10-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தர் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மனு தள்ளுபடி: மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி டி.லிங்கேஸ்வரன், ஸ்ரீதர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், அவர் இன்று (அக்.25) சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைக்கு செல்லவேண்டும் என்றும், சரண் அடையாவிட்டால் அவருக்கு கீழமை நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE