முன்பதிவு டிக்கெட் தருவதாக பணமோசடி: போலி டிக்கெட் பரிசோதகர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் விரைவு ரயிலின் முன்பதிவு டிக்கெட் பெற்று தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட போலி டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகாபடியான் (35). கூலி தொழிலாளியான இவர், சென்னையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இவர் தசரா விழாவுக்காக, சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் டிக்கெட் எடுக்க நேற்றுமுன்தினம் காலை வந்தார். ரயிலில் முன்பதிவு நிறைவு அடைந்ததால் அவரால் டிக்கெட் பெறவில்லை.

அப்போது, டிக்கெட் பரிசோதகர் உடையில் இருந்த ஒரு வடமாநில இளைஞர் முகாபடியானை அணுகினார். தான் டிக்கெட் பரிசோதகர் என்றும், ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிக்க டிக்கெட் தருவதாகவும் கூறி ரூ.5 ஆயிரம் வாங்கிக் கொண்டு டிக்கெட்டுக்கான ஒரு ரசீது வழங்கிவிட்டு சென்றுவிட்டார்.

அந்த ரசீதை வைத்து கொண்டு முகாபடியான் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறி, அந்த ரசீதை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தபோது, இது செல்லாது என கூறி, அவரை ரயிலில் இருந்து இறங்க அறிவுறுத்தினார். இதனால், முகாபடியான் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீசிஸில் அவர் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட கிஷோர்(43) என்பவரை கைது செய்தனர். இவர் கடந்த 3 மாதங்களாக பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து ரூ.4,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE