கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி உட்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை: உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

By கி.மகாராஜன் 


மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி வெள்ளைக்காளி உட்பட 5 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

மதுரை முடக்கு சாலையில் 2020-ல் கஞ்சா கடத்திய வழக்கில் ரவுடி காளி என்ற வெள்ளைக்காளி, மாரீஸ்வரன், முனீஸ்வரன், பாலாஜி, கார்த்திக் என்ற அகோரி கார்த்திக், டோரிமாரி ஆகியோரை கரிமேடு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் குற்றாலத்தில் இருந்து மதுரைக்கு காரில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை மதுரை மாவட்ட 2வது போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, ரவுடி வொள்ளைக்காளி உட்பட 6 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி வெள்ளைக்காளி, மாரீஸ்வரன், பாலாஜி, அகோரி கார்த்திக், டோரி மாரி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:

''மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொய் வழக்கு என மனுதாரர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE