செங்கம் அருகே கார்-லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று காலை ஒரு கார் சென்றது. திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செங்கம்அடுத்த பக்கிரிபாளையம் காந்தி நகரில் வநதபோது, எதிரே வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், காரில் பயணம் செய்த2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், உயிருக்குப் போராடியபெண்ணை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து நேரிட்ட இடத்தை ஆட்சியர் பா.முருகேஷ், எஸ்.பி. கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பெங்களூருவைச் சேர்ந்ததனியார் நிறுவன அதிகாரி சதீஷ்குமார்(40), அவரது மனைவி காவ்யா(35), மகன்கள் சர்வேஸ்வரன்(6), சித்தார்த்(3), தும்கூர் பகுதியில் வசிக்கும் மாமனார் னிவாசன்(60, மாமியார் மலர்(57), மைத்துனர்கள் மணிகண்டன்(40), ஹேமந்த்(38) ஆகியோர் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, காரில் வீட்டுக்குப் புறப்பட்ட நிலையில் விபத்து நேரிட்டுள்ளது. இதில் காவ்யாவைத் தவிர மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மணிகண்டன் காரை ஓட்டியுள்ளார்” என்றனர். விபத்து தொடர்பாக செங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், விபத்தில் காயமடைந்த காவ்யா உயிருக்குப்போராடி வருவதால், மேல்சிகிச்சைக்காக வேலூரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கம் அருகே நேரிட்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த தகவல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE