குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் நடவடிக்கை: கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கோவை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘க்யூஆர்’ கோடு மூலம் பெண்கள் அவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆணையர் பால கிருஷ்ணன், துணை காவல் ஆணையர் சந்தீஸ் ஆகியோர் டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்பாக பார்க் கல்வி குழுமத்துடன் இணைந்து டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.

பங்கேற்பவர் களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். கோவை மாநகரில் இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்களின் கருத்துகளை கேட்டறிய டிஜிட்டல் முறையில் ‘க்யூஆர் கோடு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கேன் செய்து அதில் கருத்துகள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம்.

பள்ளிகளுக்குச் சென்று பாலியல் குற்றங்கள் குறித்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு சில தனியார் பள்ளிகள் காவலர்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அனுமதிப்ப தில்லை என புகார்கள் வந்துள்ளன. சமீபத்தில் ஒரு தனியார் பள்ளிக்கு காவலர்கள் பலமுறை சென்ற போதும் பள்ளி நிர்வாகிகள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி காவல் துறையினரை தட்டிக் கழித்துள்ளனர்.

தற்போது அந்த பள்ளியில் பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டிய கடமை அந்தந்த பள்ளி நிர்வாகங்களுக்கு உள்ளது.

தவறினால் ஏதேனும் சம்பவங்கள் நிகழும்போது கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் வந்தால் உடனடியாக காவல் துறையினர் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறினால் அந்த குற்றங்களை மறைப்பதற்கு உதவுவதாக கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE