ஸ்ரீவில்லி.யில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் தலைமறைவு - 4 தனிப் படைகள் தேடுதல் வேட்டை

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை போலீஸார் 4 தனிப் படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காகுளத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊராட்சி குறித்து கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பன் என்பவரை எம்எல்ஏ மான்ராஜ், பிடிஓ மீனாட்சி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிள்ளையார்குளம் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்தார். இதுகுறித்து அம்மையப்பன் அளித்த புகாரில் வன்னியம்பட்டி போலீஸார் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தலில் பிடிஓ மீனாட்சி, தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியதாக ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் தலைமறைவானார். விருதுநகர் எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சங்கர்கண்ணன், முத்துக்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டு ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை தேடி வருகின்றனர். செவ்வாய் இரவு 8 மணி வரை அவர் கைது செய்யப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE