யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை அக்.16 வரை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 16-ம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்.கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து டிடிஎஃப் வாசன் தனது கையில் ஏற்றபட்டுள்ள முறிவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டிடிஎஃப் வாசன் காணொலி காட்சி வழியாக காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு, அதாவது வரும் அக்டோபர் 16-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு: டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, அவரது தரப்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE