செல்போன் பறிப்பு, வழிப்பறி, அத்துமீறல்: காஞ்சி பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமாகுமா?

By இரா.ஜெயப்பிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. திருட்டு, ஈவ்டீசிங், கஞ்சா கும்பல், திருநங்கையரின் வசூல் என பேருந்து நிலையத்துக்கு வரும்மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் ரோந்து மற்றும் நிலையான கண்காணிப்பு பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்குள் வரும் பயணிகளை குறி வைத்தசெல்போன் திருடுவது, மற்றும் பிக்பாக்கெட் அடிப்பது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இதுபோன்ற புகார்கள் மீது பெரும்பாலும் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. வலியுறுத்தி கேட்பவர்களுக்கு புகார் ஏற்புச் சான்று மட்டும் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டால் மட்டுமே இதுபோல் காவல்துறையில் வந்து புகார் அளித்து ஏற்புச் சான்றுபெறுகின்றனர். மற்றவர்கள் பேருந்து நிலையத்தை சுற்றி தேடிப்பார்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர். செல்போன் திருட்டை சைபர் கிரைம் உதவியுடன் கண்டுபிடிக்கும் பணிகளில் போலீஸார் பெரிதாக ஈடுபடுவதில்லை என்றே பலர் குறை கூறுகின்றனர்.

இதேபோல் பேருந்து நிலையத்துக்குள் கஞ்சா விற்கும் நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பயன்படுத்தப்படாத கடைகளின் அருகே பலர் ஜோடியாக அமர்ந்து கொண்டு பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் 18 வயது கூட நிரம்பாத பள்ளி மாணவிகளும் உள்ளனர் என்பது உச்சகட்ட கொடுமை. காவல்துறையினர் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவைகள் ஒரு புறம் இருக்க திருநங்கைகள் அவ்வப்போது பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக வசூலில் ஈடுபடுவதாகவும் பணம் கொடுக்காத பயணிகளை அவதூறாக பேசுவதாகவும் பலர் புகார் தெரிவிக்கின்றனர். பேருந்து நிலையம் என்பது பேருந்து ஏறுவதற்காக வரும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டது. ஆனால் இது செல்போன் திருடர்களுக்கும், கஞ்சா கடத்தும் கும்பலுக்கும் அடாவடி வசூலுக்கும் ஏற்ற இடமாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எம்.ஜெய்சங்கர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் எம்.ஜெய்சங்கர் கூறும்போது, பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதனால் எந்தப் பயனும் இல்லை. கேமரா பதிவுகளை போலீஸார் கண்காணிக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியவில்லை. பேருந்துநிலையத்துக்கு முன்பக்கம், பின்பக்கம் என்ற இரு வழிகளை வைத்துவிட்டு மற்ற வழிகளை அடைக்க வேண்டும்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் உள்ள சிறிய சந்துகளில் தப்புகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் பல ஜோடிகள் அத்துமீறலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. மாணவர்கள் பள்ளி முடிந்து பேருந்துகளில் ஏறி வீட்டுக்குச் செல்லாமல் பேருந்து நிலையத்தை சுற்றி வருகின்றனர். பின்னர் அனைவரும் மொத்தமாக ஒரே பேருந்தில் ஏறி தொங்கிக் கொண்டு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால் அனைத்து விரும்பத்தகாத செயல்களையும் தடுக்க முடியும். இவ்வாறு கூறினார்.

பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் ஜோடிகள்.

இதுகுறித்து காவல் துறை அலுவலர்களிடம் கேட்டபோது திருநங்கைகளுக்கு தொழில் செய்வதற்காக கடனுதவி வழங்குவதற்கும், அவர்கள் யாசகம் கேட்பதை தடுப்பதற்கும் தனி முகாமே நடத்தப்பட்டது. ஆனால் ஒரு சிலர்தவிர அதனைப் பயன்படுத்த பலர் தயாராகஇல்லை. நாங்கள் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுறுத்தல் தருகிறோம். திருட்டு போன்றவற்றை தடுக்க தற்போதுபேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்புகேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். செல்போன் திருடுபவர்கள் அதனை பயன்படுத்தும்போது கண்டுபிடிக்கமுடியும். திருடுபவர்கள் உதிரி பாகங்களை தனித் தனியாக பிரித்து விடுகின்றனர். இதனால்உடனடியாக கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. திருட்டை தடுப்பதற்கு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த உள்ளோம். ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE