கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் மேலுமலை பகுதியில் அதிகரிக்கும் விபத்து

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை வனப்பகுதி இறக்கமான சாலையில் விபத்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் வரை 52 கிமீ தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினசரி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. வாகனப் போக்குவரத்து முக்கியத் துவம் உள்ள இச்சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன.

குறிப்பாக, மேலுமலை வனப்பகுதி இறக்கமான சாலையில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வரும் வாகனங்கள் ஒன்றோடு, ஒன்று மோதி விபத்துகளில் சிக்கும் நிலை தொடர்கிறது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி யைச் சேர்ந்த தேசியசீலன் கூறியதாவது: மேலுமலை சாலை இறக்கமாக இருப்பதால், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வரும் கனரக வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க, ‘நியூட்ரல் கியரில்’ வாகனத்தை இயக்குவதால், வாகனம் பிரேக் பிடிக்காமல் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இச்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் 20 செமீ உயரம் இருந்த சென்டர் மீடியன் 55 செமீ உயரத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன.

இதனால், வாகனங்கள் ஒரு பகுதியிலிருந்து மறுபுறம் சாலைக்கு வருவது தடுக்கப்பட்டது. இருப்பினும், விபத்து குறையவில்லை. குறிப்பாக, சாலையை வனவிலங்குகள் கடந்து செல்லும் பகுதி என்பதால், விபத்துகளை குறைக்கும் வகையில், ‘ஸ்பீடு வயலேஷன் ரெடக்ஷன்’ அமைப்பை அமைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், சாலையோரங்களில் ஆங்காங்கே விழிப்புணர்வு பலகைகள், பிரதிபலிப்பான் ஸ்டிக்கர், சூரிய சக்தி விளக்குகள் அதிகளவில் அமைக்க வேண்டும். ‘வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்’ என்ற அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE