குன்னூர்/தென்காசி: உதகை மலைப் பாதையில் குன்னூர்அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேரில்ஆறுதல் கூறி, நிவாரணத் தொகை வழங்கினர்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஓட்டுநர் உட்பட 61 பேர், தனி பேருந்தில் கேரளாமற்றும் நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்தனர். உதகையில் சுற்றுலா மையங்களை ரசித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை கோவைக்குப் புறப்பட்டனர்.
உதகை மலைப் பாதையில், குன்னூர் மரப்பாலம் அருகே 9-வது கொண்டைஊசி வளைவில்திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத் தடுப்பை உடைத்துக்கொண்டு, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. தகவலறிந்து சென்ற போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், பேபிகலா(42) முப்பிடாதி(67), கவுசல்யா(29), தங்கம்(50), ஜெயா (40), நித்தின் கண்ணா(15), முருகேசன்(65), இளங்கோ(64) ஆகிய 8 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், பேருந்து அடியில் சிக்கியிருந்த பத்மராணி(58) நேற்றுகாலை சடலமாக மீட்கப்பட்டார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
» காவிரியில் நீர்வரத்து 3,446 கனஅடியாக சரிவு: மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடி
» ''வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்'' - ஆர்.பி. உதயகுமார் சாடல்
காயமடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலத்த காயமடைந்த கவுதமி(57), சண்முகத்தாய்(48) ஆகியோர் உதகை மருத்துவமனையிலும், முப்பிடாதி(65), செல்லம்மா(70) ஆகியோர் கோவை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.
விபத்தில் உயிரிழந்தோர் சடலங்களுக்கு, குன்னூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கினர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில், உயிரிழந்தோரின் சடலங்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டன.
கடையம் பகுதி மக்கள் சோகம்: குன்னூர் விபத்தில் தென்காசி மாவட்டம் கடையம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த நிலையில், கடையம் பகுதியில் உள்ளஅவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கீழக்கடையத்தைச் சேர்ந்த அன்பழகன்(63), கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் ஆண்டுதோறும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வார். அதன்படி, கடையம், தெற்கு கடையம், ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களை பேருந்தில் கடந்த வியாழக்கிழமை இரவு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
உதகையில் சுற்றுலாத் தலங்களைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், குன்னூர் அருகே பேருந்துபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.
சுற்றுலா சென்றவர்களில்தெற்கு கடையத்தைச் சேர்ந்த பேபிகலா (38) உயிரிழந்த நிலையில், அவரது கணவர் சண்முகம் (எ) துரை படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகிறார். தாயை இழந்தசோகம், தந்தையை நேரில் சென்று பார்க்க முடியாத வேதனையில் இவர்களது மகன் கண்ணீர் வடித்து வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் இதற்கு முன் நேரிட்ட விபத்துகள்: நீலகிரி மாவட்டத்தில் 2008 ஜூன் மாதம் கல்லட்டி மலைப் பாதையில் அரசுப் பேருந்து 500 அடி பள்ளத்தில் உருண்டதில், ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018-ல் உதகையிலிருந்து குன்னூர் சென்ற அரசுப் பேருந்து மந்தாடா பகுதியில் 50 அடி பள்ளத்தில் உருண்டதில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நேரிட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago