கவனக்குறைவாக கார் கதவை திறந்ததால் விபத்து: நாமக்கல்லில் ஆட்டோ ஒட்டுநர் உயிரிழப்பு

By டி.ஜி.ரகுபதி 


நாமக்கல்: நாமக்கல்லில் கவனக்குறைவாக காரின் கதவை திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த வளையப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் விவசாயம் செய்து கொண்டு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 30-ம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மனைவியுடன் தங்கியிருந்த சரவணன் 31-ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதற்காக நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரில் இருந்த பெண் ஒருவர் பின்னால் வாகனம் வருவதை கவனிக்காமல் திடீரென தனது காரின் கதவை திறந்தார். அதில் மோதிய சரவணன் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நாமக்கல், கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சித்ரா என்பதும் சாலையின் இருபுறங்களிலும் பார்க்காமல் அலட்சியமாக காரின் கதவை திறந்ததே விபத்துக்கான காரணம் என்பதும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சரவணன் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE