ஆடு திருடர்களால் எஸ்எஸ்ஐ கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: கீரனூர் அருகே ஆடு திருடர்களால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் பூலாங்குளத்துப்பட்டியில் 2021 நவம்பர் 21-ம் தேதி மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிச் சென்ற 3 பேரை, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன்(51), தலைமைக் காவலர் சித்திரவேல் ஆகியோர் விரட்டிச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப் பாதை பகுதியில் ஆடு திருடர்களை பூமிநாதன் மடக்கிப் பிடித்தார். அப்போது, ஆடு திருடர்கள் அரிவாளால் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதுகுறித்து கீரனூர் போலீஸார் விசாரணை நடத்தி, கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சேர்ந்த பி.மணிகண்டன்(19) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.

சிறார் நீதிமன்றத்தில் வழக்கு: கைதான மணிகண்டன் மீதான வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. மற்ற இருவரும் சிறுவர்கள் என்பதால், அவர்கள் மீதான வழக்கு புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கீரனூரில் கொலை நடந்த இடத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் ஆய்வு செய்தார். இந்தவழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எஸ்எஸ்ஐ பூமிநாதனைக் கொன்ற குற்றத்துக்காக மணிகண்டனுக்கு ஆயுள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், சாட்சியங்களை மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், பூமிநாதனின் செல்போன் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜரானார். கொலை வழக்கை முறையாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தந்த கீரனூர் போலீஸாரை எஸ்.பி. வந்திதா பாண்டே பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE