ம.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம் சாட்னா பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, வீட்டுக்கு தெரியாமல் ரயில் ஏறி கடந்த 25-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இறங்கினார். அந்த சிறுமியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சுமார் 8 கி.மீ. தொலைவு நடந்து சென்று உள்ளார். செல்லும் வழியில் உடலில் ரத்தம் சொட்ட சொட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் அவர் உதவி கோரியுள்ளார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. இறுதியில் ஓர் ஆசிரமத்தின் நிர்வாகிகள் சிறுமி குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீ்ட்டு உஜ்ஜைனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இந்தூர் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அசோக் லத்தா கூறும்போது, “பாலியல் வன்கொடுமையால் சிறுமி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சுமார் 72 மணி நேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 6 ஆட்டோ ஓட்டுநர்களை பிடித்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் பாரத் சோனி (38) முதலில் சிறுமியை சந்தித்துள்ளார். அவரது ஆட்டோவில் ரத்த கறை படிந்திருக்கிறது.

மரபணு சோதனை: அவர் மீதான சந்தேகம் வலுவடைந்துள்ளது. அவரது மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மற்ற ஆட்டோ ஓட்டுநர்களின் மரபணுக்களையும் சோதனை செய்ய உள்ளோம். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலம் தேறி வருகிறார். முழுமையாக உடல் நலம் தேறிய பிறகுஅவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்.

இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE