சிவகங்கை பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: போலீஸார் திணறல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து, வாளை காட்டி மிரட்டி நடத்துநரிடம் பணப்பை பறித்த சம்பவம் நடந்து 15 நாட்களாகியும், இன்னும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

திருப்புவனத்திலிருந்து சிவகங்கைக்கு செப்.8-ம் தேதி இரவு அரசு நகரப் பேருந்து வந்தது. வீரவலசை விலக்கு அருகே வந்த அந்த பேருந்தை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள், பேருந்தில் ஏறி வாளை காட்டி மிரட்டி நடத்துநர் பெரியசாமியிடம் (45) இருந்து பணப் பையை பறித்துவிட்டு தப்பினர்.

பணப்பையில் ரூ.1,000 பணமும், ரூ.25,000 மதிப்பிலான பயணச் சீட்டுகளும் இருந்தன. அதே சமயத்தில், அதே சாலையில் கரும்பாவூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வண்டவாசியைச் சேர்ந்த ஜெய பால் (60) என்பவரை, 2 இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 5 பேர், வழிமறித்து வாளை காட்டி மிரட்டி ரூ.5,000 மற்றும் வாகனத்தையும் பறித்துச் சென்றனர்.

இதேபோல், கடந்த வாரம் இரவு சுந்தர நடப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மிரட்டி, அவரது வாகனத்தை ஒரு கும்பல் பறித்துச் சென்றது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாமல் திணறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE