மெரினாவில் போலீஸ் என்று கூறி மிரட்டி பணத்தை பறித்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர்வணிக வளாகம் ஒன்றில் உதவி மேலாளராக உள்ளார். இவர் தனது பெண் தோழி ஒருவருடன் மெரினா, பார்த்தசாரதி ஆர்ச் எதிரில் உள்ள மெரினா கடற்கரை மணற்பரப்பில் கடந்த 22-ம் தேதி இரவு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த இளைஞர் ஒருவர், தன்னை `போலீஸ்' என அறிமுகம் செய்ததோடு, இருவரையும் தனது செல்போனில் படம் பிடித்தார்.

பின்னர் இருவரிடமும், ``உங்கள் வீட்டுக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி விடுவேன். மேலும், சமூக வலைதளங்களிலும் பரப்பிவிடுவேன். இதனால், உங்கள் குடும்ப வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். நான் அவ்வாறு செய்யாமலிருக்க ரூ.15 ஆயிரம் கொடுங்கள்'' எனக்கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அவர்கள், தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதோடு, தங்களது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.12 ஆயிரத்தை ஜிபே மூலம் அந்த நபருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் `போலீஸ்' எனக்கூறி பணம் பறித்தவர் சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அசர் அலி (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.12,000 மற்றும் குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கைது செய்யப்பட்ட அசர் அலி மெரினா கடற்கரை பகுதியில் பலூன் கடை வைத்திருப்பதும், இவர் மீது ஏற்கெனவே அடையாறு மற்றும் வியாசர்பாடி காவல் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE