மேலும் ஒரு கொலை வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது?

By என். சன்னாசி

மதுரை: திருமங்கலம் அருகே ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்படுகிறார் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி. மதுரை கருப்பாயூரணியில் 2 ஆண்டுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலையில் செந்திலுக்கு தொடர்பு இருந்தது. இவ்வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேர் கைதான நிலையில், செந்தில் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார்.

இதற்கிடையில், செந்தில் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், கணவர் செந்திலை கண்டுபிடித்து தருமாறு மதுரை உயர்நீதி மன்ற கிளையிலும் அவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது குறித்து மதுரை ஐஜி அஸ்ராகார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனிப்படை போலீஸாரின் விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் தாமிரபரணி ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், வரிச்சியூர் செல்வத்திடம் கார் ஓட்டுநராக இருந்த மதுரை மாவட்டம், வில்லூர் பகுதியைச் சேர்ந்த புவனேசுவரன் (எ) ஈஸ்வரன் கடந்த 2018-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் வரிச்சியூர் செல்வத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இக்கொலை வழக்கு தொடர்பாக சிறையிலுள்ள வரிச்சியூர் செல்வத்தை போலீஸ் காவலில் விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, அவரை நேற்று முன்தினம் முதல் வில்லூர் போலீஸார் 5 நாள் காவலில் எடுத்தனர். அவரிடம் டிஎஸ்பி இலக்கியா தலைமையில் ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்ட போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். விசாரணைக்கு பிறகு அவர் , ஈஸ்வரன் கொலையில் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE