வீரசோழபுரத்தில் 100 நாள் திட்ட பெண் பணியாளர்கள் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்த 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: 100 நாள் வேலை திட்டப் பெண் பணியாளர்களை படம் பிடித்து படங்களை ஆபாசமாக மார்பிங் செய்த பணித்தள பொறுப்பாளர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(27). இவர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணித் தள பொறுப்பாளராக உள்ளார். இவரது பணி, பணிக்கு வரும் பணியாளர்களின் வருகையை உறுதி செய்யும் வகையில் அவர்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். அந்த வகையில் வேலைக்கு வரும் பெரும்பாலான பெண் பணியாளர்களை,தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து தனது செல்போனில் சேமித்திருந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது செல்போனை தனது நண்பர் தினேஷிடம்(27) அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தினேஷ் அந்த செல்போனை எடுத்து பார்த்தார். அதில் அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்களின் படங்களை வசந்தகுமார் ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷ், வார்டு உறுப்பினர் ரவியிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வீரசோழபுரம் கிராம மக்களிடையே பரவியது. இதை தொடர்ந்து தினேஷ் வீடு முன்பு கிராம மக்கள் திரண்டனர். செல்போனில் இருந்த படங்களை பார்த்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வசந்தகுமார், அக்கிராமத்திலிருந்து தப்பி சென்றார்.

இதையறிந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தப்பியோடிய வசந்தகுமாரை மூரார்பளையத்தில் போலீஸார் கைது செய்தனர். ஆனால் கைது செய்யப்பட்டஅவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனக் கோரி கிராம மக்கள் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர். இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ் தலைமையில் அங்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக தினேஷையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் வார்டு உறுப்பினர் ரவியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE