ஊத்தங்கரை அருகே விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: தனியார் பள்ளிப் பேருந்து தீ வைத்து எரிப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மகன் சதாம் உசேன் (33). பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு 7 மணி அளவில் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் - ஊத்தங்கரை சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பள்ளிப் பேருந்து சதாம் உசேன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளிப் பேருந்து அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் சதாம் உசேன் உயிரிழந்தார்.

விபத்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீஸார், சதாம் உசேனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளிப் பேருந்தை பறிமுதல் செய்து, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

பள்ளிப் பேருந்து எரிப்பு: இந்நிலையில், காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளிப் பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினர். பேருந்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் தனியார் பள்ளிப் பேருந்து முழுமையாக எரிந்து எலும்புக் கூடானது.

எஸ்பி நேரில் விசாரணை: இச்சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ்குமார் தாகூர், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஊத்தங்கரை காவல் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய பேருந்தை, போலீஸ நிலைய வளாகத்திலேயே மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE