மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து விபத்தில் சிக்கிய யூடியூபர் வாசன் கைது

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சிறுவர்களையும், மாணவர்களையும் கவர்ந்து வருபவர் டி.டி.எஃப் வாசன். இவர் தனது மோட்டார் சைக்கிள் சாகசங்களை யூடியூப்பில் வெளியிட்டு அதன்மூலம் பிரபலமானவர். இவர் சாலை விதிகளை மீறி இதுபோல் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவது இவருக்கு மட்டுமன்றிசாலையில் செல்லும் பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளானார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வாசன் சென்னையில் இருந்து - மகாராஷ்டிராவுக்கு தனது நண்பர் ஒருவருடன் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார். இருவரும் தனித் தனி மோட்டார் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்துவதுபோல் அதிவேகத்தில் சென்றுள்ளனர்.

ஆதரவாளர்களை மகிழ்ச்சி படுத்தும் விதத்தில் ஸ்டண்ட் என்று சொல்லக் கூடிய வீலிங் சாகசத்தில் டி.டி.எப்.வாசன் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுபடும்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் சாலையில் தேய்ந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டி.டி.எப்.வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

காரப்பேட்டை அருகில் உள்ள மீனாட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிசிச்சைபெற்ற நிலையில்அவரது கைக்கு மாவுக்கட்டு போடப்பட்டு கால், உடல் போன்ற இடங்களில் காயம்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் வாகனத்தை இயக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது, மோட்டார் வாகனச் சட்டத்தில் இரு பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளில் அவர்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

புழல் சிறையில் அடைப்பு: இந்நிலையில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் சென்னை சென்று நண்பர் வீட்டில் தங்கி இருந்த வாசனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் ஒரு மணி நேரம்விசாரணை நடத்தினர். அவரது ஆதரவாளர்கள் வரலாம் என்பதால் காவல் நிலைய வளாகத்துக்குள் செய்தியாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட வாசன் நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE