நியோ மேக்ஸ் மோசடி | கைதான முக்கிய நிர்வாகிகளை காவலில் விசாரிக்க நடவடிக்கை

By என்.சன்னாசி

மதுரை: நியோ - மேக்ஸ் மோசடியில் கைதான முக்கிய நிர்வாகிகளை போலீஸ் காவலில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'நியோ-மேக்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் கிளைகளை ஏற்படுத்தி கூடுதல் வட்டி தருவதாக ஏராளமான முதலீடுகளை ஈர்த்தன. இதன்மூலம் பல கோடி ரூபாயை வசூலித்து, பிளாட், மருத்துவமனை, கல்லூரிகளை வாங்கி முறை கேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில், மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் 'நியோ மேக்ஸ்' மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மதுரை விராட்டிபத்து கமலக் கண்ணன் பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட முகவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் டிஎஸ்பி மணிஷா தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் விசாரிக்கின்றனர்.

இவ்வழக்கில் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாயராஜ் , மதுரை பைபாஸ் ரோடு எல்ஐசி அதிகாரி பத்மநாபன், விருதுநகர் மீனாட்சிபுரம் மாரிச்சாமி, சிவகங்கை மாவட்டம், குமாரபட்டி மலைச்சாமி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கமலக்கண்ணன், பாலசுப்பிரமணி, வீரசக்தி உள்ளிட் டோரை டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் தேடிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வைத்து , கமலக்கண்ணன்(55), இயக்குநர்களில் ஒருவரான மதுரை விராட்டிபத்து சிங்காரவேலன் (56) ஆகியோர் 2 நாளுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அவர்கள் மதுரை பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) ஆஜர்படுத்தினர். இருப்பினும், இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

போலீஸார் கூறுகையில், ''இது வரையிலும் 552 முதலீட்டார்களிடம் வசூலித்த சுமார் ரூ. 105 கோடி ஏமாற்றப்பட்ட தொகையாக புகார்தார்கள் வந்துள்ளன. வழக்கு விசாரணையிலுள்ள போதிலும், நியோ- மேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சொத்துக்கள் விவரம், மொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, வங்கிக் கணக்குகள் மற்றும் பிற குற்றவாளிகள் குறித்து அறிய கமலக்கண்ணன், சிங்காரவேலனை போலீஸ் காவலில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE