சென்னையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்ற ஐவர் கும்பல் கைது: என்ஐஏ விசாரணை?

By செய்திப்பிரிவு

சென்னை: அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த இந்து பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சையது அபுதாஹீர் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் கைதாகியுள்ளதால், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கொளத்தூர் உதவி ஆணையரின் தனிப்படை பிரிவு போலீஸாருக்கு புழல் மற்றும் காவாங்கரை பகுதியில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் புதன்கிழமையன்று சம்மந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்த யோகேஷ் தலைமறைவான நிலையில், அங்கிருந்த மதுபாட்டில்களை மட்டும் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், யோகேஷ் அங்கு வந்தால் தகவல் தெரிவிக்குமாறு அப்பகுதி மக்களிடம் போலீஸார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், வியாழக்கிழமை காலை, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சையத் என்பவரது செல்போனில் இருந்து தனிப்படை போலீஸாரை யோகேஷ் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, யோகேஷை விசாரணைக்கு வருமாறு அழைத்த போலீஸார், விசாரணைக்கு வந்தால், ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பிவிடுவதாக கூறியுள்ளனர்.

இதன்படி, காவல் நிலையம் வந்த யோகேஷிடம், போலீஸார் மதுபானம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்ததில் யோகேஷ் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்த விசாரணையில், புழல் அம்மா நினைவு நகர் முதல் தெருவில் வசித்து வரும் யோகேஷ் (35) புழல், காவாங்கரை, பகுதியில் சொந்தமாக 'தாதா' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருவதும், எளிதாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக பெங்களூர், புதுச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

மேலும், யோகேஷ் சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கி வாங்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உத்தரப் பிரதேசம் சென்ற யோகேஷ் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வாங்கி வந்துள்ளார். இதில் ஒரு துப்பாக்கியை ஹோட்டல்களுக்கு இறைச்சி சப்ளை செய்யும் ரஹ்மத்துல்லா மற்றும் மண்ணூர்பேட்டையை சேர்ந்த இந்து முன்னனி சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய சையது அபுதாஹீர் மூலம் பூந்தமல்லி அருகே கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிபிஜி சங்கரிடம் ஒரு துப்பாக்கியை 1.50 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு துப்பாக்கியை அபுதாஹீரிடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளத் துப்பாக்கி வாங்கிய கொளத்தூர் பூம்புகார் நகர் 11-வது தெருவை சேர்ந்த அபுதாகீர் (38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், தொழில் போட்டி காரணமாக பிரச்சினை ஏற்படும் போது மிரட்டுவதற்காக துப்பாக்கி வாங்கியது தெரியவந்தது. மேலும், யோகேஷ் அளித்த தகவலின் பேரில் ரஹமதுல்லா மற்றும் காங்கிரஸ் பிரமுகர் சையது சர்ப்ரஸ், முக்தாகீர், சையது அபுதாஹீர் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

குறிப்பாக, கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் பிரமுகர் சையது சர்ப்ராஸ் மீது 300 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், 8 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைக்கு சென்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

இந்நிலையில், அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த இந்து பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சையது அபுதாஹீர் இந்த கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் கைதாகியுள்ளதால் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வியாழக்கிழமை கள்ளத் துப்பாக்கி வழக்கில் கைதான யோகேஷ், சையது சர்பரஸ், ரஹமத்துல்லா, முக்தாகீர் ஆகிய நான்கு பேரை புழல் சிறையில் அடைத்த போலீஸார், அபுதாஹீரை மட்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE