பல்லடம் கொலை சம்பவம் | குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ் - 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனால் போலீஸார், அவரை காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(49), அவரது சகோதர் செந்தில்குமார்(46), தாய் புஷ்பவதி(68), சித்தி ரத்தினாம்பாள்(59) ஆகிய நால்வரை கடந்த 3-ம் தேதி மாலை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

இதில், திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார்(27), திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து(24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா(22) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக செல்லமுத்து முதலில் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீஸாரிடம் சரணடைந்த வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கள்ளக்கிணறு அருகேயுள்ள தொட்டம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பல்லடம் டிஎஸ்பி சவுமியா தலைமையிலான போலீஸார், நேற்று அதிகாலை வெங்கடேஷை, தொட்டம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேஷ் சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார். 2 போலீஸார் பாதுகாப்புடன் வெங்கடேஷ் இறங்கியபோது, திடீரென்று, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பிடிக்க முயன்ற போலீஸார் மீது மண்ணை தூவி தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.

கால்களில் துப்பாக்கிச் சூடு: இதனால் டிஎஸ்பி சவுமியா மற்றும் போலீஸார் வெங்கடேஷின் 2 கால்களிலும் சுட்டனர். துப்பாக்கி குண்டு பட்டவுடன் தப்பியோட முயன்ற வெங்கடேஷ் சுருண்டு விழுந்தார். தொடர்ந்து அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர்.

வாக்குவாதம்: இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கள்ளக்கிணறு அருகே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வசித்து வந்தனர். கடந்த 3-ம் தேதி உயிரிழந்தவர்களுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதமே, பிரச்சினையாக மாறியது. குற்றவாளிகள் மதுபோதையில் இருந்துள்ளனர். பதுக்கி வைத்துள்ள அரிவாளை காட்டுவதாக அழைத்துச் சென்ற பிரதான குற்றவாளியான வெங்கடேஷ் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன. கொலை சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ்(எ) ராஜ்குமார், விஷால் (எ) சோனைமுத்தையா, செல்லமுத்து மற்றும் ஐயப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

அரிவாள் தந்த தந்தை: தனிப்படை போலீஸார் கூறும்போது, “வெங்கடேஷ்(27) செல்போனில் தொடர்பு கொண்டதும், அவரது தந்தை ஐயப்பன்(52) அரிவாள் கொண்டுவந்து சம்பவ இடத்தில் தந்துள்ளார். அப்போது நண்பர்களான விஷால் (எ) சோனை முத்தையா(22) மற்றும் செல்லமுத்து(24) ஆகியோர் 4 பேரை வெட்டுவதற்கு உதவியாக இருந்துள்ளனர். வெங்கடேஷ் காலில் குண்டு பாய்ந்ததில் சிகிச்சையில் உள்ளார். செல்லமுத்து கால் உடைந்ததால் சிகிச்சையில் உள்ளார். விஷால் (எ) சோனைமுத்தையா மற்றும் ஐயப்பன் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE