நாட்டு துப்பாக்கிகளுடன் கோவையில் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் 2 நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த வெல்டிங் பட்டறை உரிமையாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட துடியலூரை அடுத்த எண்.22 நஞ்சுண்டாபுரம் பகுதியில், முயல் வேட்டையாடப் படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஞானசேகரன் (35) என்பவர், செங்கல் சூளைக்கு அருகே ஒரு நாட்டு துப்பாக்கியுடன் இருந்துள்ளார்.

இதைப் பார்த்த வனத்துறையினர், அங்கு சோதனை மேற்கொண்டதில், பயன்படுத்திய 27 தோட்டாக்கள், பயன்படுத்தாத ஒரு தோட்டா, தோட்டா செய்வதற்கான கரி மருந்து 350 கிராம் ஆகியவை இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவை உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள் என்பது தெரியவந்தது.

ஞானசேகரன்

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் ஞானசேகரனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஒரு நாட்டு துப்பாக்கி கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஞானசேகரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். ஞானசேகரன் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE