சென்னை | கஞ்சா விற்பனை செய்ததாக கேரளாவை சேர்ந்தவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கேரள வியாபாரி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸார் போதை தடுப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து அனைத்து காவல் நிலைய போலீஸாரும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் பெரியமேடு மூர்மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த கேரள மாநிலம், ஆலப்புலா பகுதியைச் சேர்ந்த அனஸ்யாகியா (39) என்பவரை பிடித்துவிசாரித்தனர். அப்போது அவரிடம் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

வியாசர்பாடியில் ஒருவர் கைது: இதேபோல், எம்கேபி நகர் 18-வது மத்திய குறுக்குத் தெருபகுதியில் வியாசர்பாடி போலீஸார் ரோந்து வந்தனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அதே பகுதி முகமது ரிபாதின் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சா பண்டல் பறிமுதல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE