கிருஷ்ணகிரி அருகே ஐடி ஊழியரிடம் ரூ.17 லட்சம் மோசடி

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (26). தனியார் ஐடி நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் - அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி ஒரு குறுந் தகவல் வந்தது.

அதில், “நாங்கள் அனுப்பும் யுடியூப் வீடியோக்களைப் பார்வையிட்டு, லைக் செய்தால், உங்களுக்கு வருவாய் கிடைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவர்கள் அனுப்பிய வீடியோக்களை தியாகு லைக் செய்ததன் மூலம், அவருக்கு ரூ.150 முதல் ரூ.1,000 வரை வருவாய் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீண்டும் ஒரு குறுந் தகவலை அனுப்பினர்.

அதில், “நாங்கள் அனுப்பியுள்ள லிங்க்-ல் பணம் செலுத்தினால், எங்கள் வீடியோக்களுக்கு நீங்களும் உரிமையாளராகலாம். கிடைக்கும் வருவாயில் பங்கு தரப்படும். இதன் மூலம் முதலீட்டுப் பணம் இரட்டிப்பாகும். இதுதான் அடுத்த டாஸ்க்” எனக் கூறப்பட்டிருந்தது. அதை நம்பி அதிலும் சிறிது பணம் முதலீடு செய்த தியாகுவுக்கு, குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் அனுப்பிய பல்வேறு தொடர்புகள் மூலம், அவர்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் ரூ.17 லட்சத்து 25 ஆயிரத்து 400-ஐ தியாகு முதலீடு செய்துள்ளார். அதன் பின்னர் அவர்களது லிங்க், இணையதளம், பணப் பரிவர்த்தனை வாலட் எதுவுமே செயல்படவில்லை. தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த தியாகு, கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் காந்திமதி மற்றும் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE