டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் முறைகேடு புகார்: தேர்வு மைய சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-2 இரண்டாம் நிலை பொது அறிவுத் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தேர்வு மைய சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பி.ஏ. தமிழ் படித்துள்ளேன். குரூப்-2 மற்றும் குரூப் - 2 ஏ பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்த தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், இரண்டாம் நிலை பிரதானத் தேர்வில் பங்கேற்கலாம்.

இரண்டாம் நிலை பிரதானத் தேர்வுக்கு, காலையில் தமிழ் மொழித் தேர்வும், மதியம் பொது அறிவுத் தேர்வும் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், இரண்டாம் நிலைத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். தேர்வு நாளில் வினாத் தாள் மற்றும் விடைத் தாள் இணைக்கப்பட்ட தேர்வுத் தாள் வழங்கப்பட்டது.

அதில், எனது தேர்வு எண்ணுக்குப் பதிலாக வேறு தேர்வு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. பலருக்கு இவ்வாறு தேர்வு எண் மாறியிருந்தது. இதனால் தேர்வு திடீரென நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பலர் செல்போன் மற்றும் புத்தகங்களைப் பார்த்து தேர்வெழுதினர். இவ்வாறு பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்தன.

அன்று மதியம் பொது அறிவுத் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறைக்கு மதியம் 2.15 மணிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், தேர்வு நடத்தும் அலுவலர் 2.30 மணிக்குத்தான் வந்தார். வினாத்தாளை வாசிப்பதற்கான 15 நிமிட காலஅவகாசம் வழங்கப்படவில்லை. மாலை 5.30 மணிக்குத் தேர்வு முடிக்கப்பட்டு, விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டன.

ஆனால், அதே வளாகத்தில் இருந்த மற்ற தேர்வு அறைகளில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அன்று காலையில் தமிழ் தேர்வில் குழப்பம் நடைபெற்றதால், கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. அதை தவறாகப் புரிந்துகொண்டு, மதியம் நடைபெற்ற தேர்வுக்கும் பல தேர்வு மையங்களின் அலுவலர்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளனர்.

இதனால் மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வின் இரண்டாம் நிலை பொது அறிவுத் தேர்வு ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் தேர்வு மையங்களின் சிசிடிவி காட்சிகளையும், தேர்வன்று டிஎன்பிஎஸ்சி சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE